இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1200 கிலோ சமையல் மஞ்சளை, ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
ராமநாதபுரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால், இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக, இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
எனினும் இவ்வாறான கடத்தல் சம்பவங்களை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, தடுத்து நிறுத்தி, பொருட்களை பறிமுதல் செய்வதுடன், கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மதியம், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உச்சிப்புளி அருகே சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக கடற்கரை ஓரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில், அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 28 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



