இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் கடன்?
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில், இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவுக்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரிக்க வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை பிணை எடுப்பாக அங்கீகரித்தது.
இந்த நகர்வு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற பலதரப்பு முகவர்களிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரும் என்று இலங்கை நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த உதவித்தொகை தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முன்மொழியப்பட்ட உலக வங்கி நிதியில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்துக்காக, தலா 250 மில்லியன் டொலர்கள் வீதம் இரண்டு தவணைகளில் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த தகவலை இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டம்பரில் நடைபெறவுள்ள, சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், முதல் தவணை உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் என்று உலக வங்கித் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்