Last updated on April 11th, 2023 at 07:57 pm

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் தீர்வு

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் தீர்வு

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் தீர்வு

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை பயனாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்மையான இறால் உற்பத்திப் பண்ணையாகவும் அதனை விஸ்தரிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ‘மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆராய்ந்தபோது இப்பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்ச்சியாக என்னோடு கலந்துரையாடி வருகின்றார்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட வட்டவான பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் சர்வதேச நிறுவனம் ஒன்றின் நிதிப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட குறித்த இறால் பண்ணை தொடர்ந்து வந்த காலங்களில் தனியார் முதலீடுகளை உள்ளீர்த்து, தற்போது இடியப்ப சிக்கலாகிக் கிடக்கின்றது.

இந்நிலையில், இன்று சம்பந்தப்பட்ட பயனாளிகளுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதனை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் தீர்வைக் காணமுடியும் என்ற கருத்தை நான் இன்று இங்கு முன்வைக்கின்றேன்.

அதைவிட, வடக்கு கிழக்கு மாத்திரமல்லாமல் இலங்கை முழுவதும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவும் இன்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதில் அந்தந்தப் பகுதி கடற்றொழில் சங்கங்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அவர்களின் பங்களிப்புடன் கடற்படை, கடற்றொழில் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றேன்.

இங்கு சட்டவிரோத கடற்றொழில் மாத்திரமல்ல, கடலில் வலையை போட்டுவிட்டு அதனை எடுக்கப்போவதற்கிடையில் மீன்கள் களவாடப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாகவும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடி வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க இருக்கிறோம்.

விரைவாக இந்த மாவட்ட மக்கள் சுயபொருளாதாரத்தை மேற்கொள்வதுடன் நாட்டுக்கும் ஒரு வருமானத்தை தேடிக்கொடுக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு விடயத்தையும் சுற்றுலாத்துறையையும் இணைத்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

இதுதொடர்பாக என்னை சந்தித்த சில தரப்புக்கள், இந்தியாவின் கேரள மாநிலத்தின் வாவிகளில் சுற்றுலாத்துறை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்கள். அதுபோல இங்கும் இருக்கும் வாவிகளில் திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

குறிப்பாக, கல்லடி பழைய பாலத்தை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக இங்குள்ள தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து ஒருமுடிவை எடுக்கலாம், என தெரிவித்தார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் போது இனங்காணப்பட்ட விடயங்கள் எவை என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர்,

பெரும்பாலும் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சம்பந்தப்பட்ட விடயங்களில் மாவட்டங்களுக்கு மாவட்டம் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் பிரச்சினைகள் ஒரேமாதிரியானவையாகவே இருப்பதாகவும், இப்போதைய நாட்டின் பொருளாதார நிலையில் உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும் கிடைக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி முடிந்தளவு பிரச்சினைகளை தீர்த்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்