இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – சமீம்

 

-அம்பாறை நிருபர்-

இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் கே.எல். சமீம் தெரிவித்துள்ளார்.

இறக்காமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மஹ்மூட் லெப்பையுடன் இறக்காமம் பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, கோட்டக் கல்விப் பணிப்பாளர் மஹ்மூட் லெப்பை, ஆசிரியர் ஆளணி நிலவரம் தொடர்பான ஒரு அறிக்கையையும் உப தவிசாளர் கே. எல். சமீமிடம் வழங்கினார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், இறக்காமம் கல்விக் கோட்டத்தின் 12 பாடசாலைகளுக்காக 2025 ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் ஆளணி எண்ணிக்கை 313 ஆகும். எனினும், தற்போது 283 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால், மேலும் 30 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் குறிப்பிட்ட உப தவிசாளர் கே. எல். சமீம், மீதமுள்ள 30 ஆசிரியர் வெற்றிடங்களையும் இந்த ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.

இறக்காமம் கல்விக் கோட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.