இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
விபத்துக்கள் நேற்று (12) பூநகரி மற்றும் ஹூங்கம பகுதிகளில் சம்பவித்துள்ளன.
பூநகரி பொலிஸ் பிரிவில் பரந்தன் பூநகரி பிரதான வீதியில் 20ஆவது கிலோமீட்டர் தூண் அருகே வீதியில் பயணித்த ஒருவர் மீது வாகனம் மோதியது.
விபத்துக்குப் பின்னர் வாகனம் நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், விபத்தில் சிக்கிய நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் பூநகரி பகுதியைச் சேர்ந்த 82 வயதானவர் என தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை கைது செய்ய பூநகரி பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் நேற்று மாலை ஹூங்கம பொலிஸ் பிரிவில் திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் படத்த பகுதியில் ஹூங்கம திசையிலிருந்து தங்காலை திசை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, கெப் வண்டியின் சாரதி மற்றும் கெப் வண்டியில் பயணித்த பெண் ஒருவரும் படுகாயமடைந்து ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ரன்ன பகுதியை சேர்ந்த 33 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.