
இராணுவ வீரருடைய ‘தொடர்பு’ துண்டிப்பு: விரக்தியடைந்த குடும்பபெண் விபரீத முடிவு
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று (புதன் கிழமை) இராணுவ வீரருடைய ‘தொடர்பு’ துண்டிக்கப்பட்டதால், விரக்தியடைந்த இரண்டு பிள்ளைகளின் தாய் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குருணாகல் வரக்காபொல பகுதியை சேர்ந்த 34வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் இருந்த நிலையில் கணவருடன் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் கணவரையும் சில மாதங்களாக இவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரர் ஒருவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
குறித்த பெண்ணிற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
