இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து
-பதுளை நிருபர்-
இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறையில் இருந்து லுணுகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, பசறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன், பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை தமிழ் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் நேருக்கு நேர் மோதியது
பசறையில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் பயணித்த பியாஜோ ரக முச்சக்கரவண்டியும், வியாபாரத்திற்காக சிற்றுண்டி உணவுகளை தயாரிப்பதற்கான பொருட்களை பசறை நகருக்கு கொண்டு சென்ற பஜாஜ் ரக முச்சக்கரவண்டியும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பஜாஜ் ரக முச்சக்கரவண்டியின் சாரதியான 65 வயதுடைய நபர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பியாஜோ ரக முச்சக்கர வண்டியில் சென்ற சாரதி உட்பட இளைஞர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததாகவும், விபத்து இடம்பெற்றதன் பின்னர் தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
பியாஜோ ரக முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட இருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்