இரட்டை வேடம் போடுகிறதா இலங்கை தமிழ் அரசு கட்சி..?

வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரு கட்சி இலங்கை தமிழ் அரசு கட்சி ஆகும், இம் முறை ஜனாதிபதி தேர்தலில் தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்பும் வேலையில் இறங்கியுள்ளனர் என்றே தோன்றுகின்றது
அக்கட்சியின் மத்திய குழு பலமுறை கூடி உருப்படியாக எந்த தீர்மானமும் எடுக்காமல் இறுதியாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு தெரியாமல் தாங்கள் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு என்றும் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பா.உ சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்

அடுத்த நொடியே தனக்கு இது தொடர்பாக தெரியாது, இது வரலாற்று தவறு என்று மாவை ஐயா தெரிவித்தார், மறுநாள் மீண்டும் மாவை ஐயா மத்திய குழு தீர்மானம் என்பதால் கட்சியின் முடிவே இறுதி தீர்மானம் என தெரிவித்திருந்தார், மேலும் பா.உ சிறீதரன் அவர்கள் தமிழ் பொதுவேட்பாளர் அவர்களுக்கு ஆதரவு என்றும், அவருக்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை ஓரிரு நாட்களில் மாவை ஐயாவின் இல்லத்திற்கு ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், மாவை ஐயா மீண்டும் ரணில் அவர்கள் ஜனாதிபதியாக வருவது நல்லது என்று கருத்து தெரிவித்திருந்தார்

இவற்றுக்கெல்லாம் முதலில் தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு பல தடைவைகள் கூடி முடிவெடுக்காமல் இருந்த காலகட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் ஊடக பேச்சாளர் பா.உ சுமந்திரன் அவர்கள், நாங்கள் சகல வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை செய்கிறோம் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்த்த பின்னர் தாங்களும் ஒரு தீர்வை முன்வைத்து எழுத்து மூலம் அதனை தெளிவுபடுத்தி அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம் என அறிவித்திருந்தார்

ஆயினும் எந்த ஒரு தீர்வையோ அல்லது தங்கள் கட்சி சார்ந்து, தமிழ் மக்களின் நலன் கருதி எந்த ஒரு தீர்மானத்தையும் முன்வைக்காமலேயே சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு என்று பின்நாட்களில் அறிவித்தார்

இவ்வாறிருக்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் உள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் ஐயா அவர்களது இல்லத்தில் கூடிய கட்சியின் உயர்மட்ட குழு அல்லது தேர்தல் சம்பந்தாமாக மத்திய குழுவால் தெரிவு செய்யப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது இதன்போது கருத்து தெரிவித்த பா.உ சிறீதரன் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக ஆறு கட்சிகளின் வேட்பாளர்களுடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைகளை செய்து கட்சியின் இறுதி முடிவு எட்டப்படும் என்கின்றார்

மேலும் அக்கட்சியின் தலைவர் மாவை ஐயாவும் இதே கருத்தை கூறியிருந்தார் எனவே இதிலிருந்து ஏதேனும் ஒரு தெளிவு மக்களுக்கு கிடைக்கின்றதா..?

தங்கள் கட்சிக்குள் முரண்பாடுகளும் அந்த முரண்பாடுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு கருத்துக்களை கூறிக்கொண்டும் இருக்கும் தமிழ் அரசு கட்சியினர் தங்களை நம்பி வாக்களித்த மக்களை குழப்நிலைக்கு கொண்டு செல்வாதகவே தோன்றுகிறது

இதேவேளை மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்றும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குழப்பகாரர்களுக்கு மக்கள் தகுந்த பாடங்களை கற்பிப்பார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் சமூக ஊகங்கள் மூலம் கருத்துக்களை கூறிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

-ஊடகவியலாளர்
பரமேஸ்வரன் கார்த்தீபன்-