இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த தாய் : குழந்தைகளை மீண்டும் ஏற்க மறுப்பு

பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிசுக்களின் தாய் உட்பட மூன்று பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வத்தளை நீதவான் தம்மிக்க உடுவெவிதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து,  குழந்தைகளை வளர்க்க போதிய வசதி இல்லாததால் அவர்களை விற்க முடிவு செய்ததாக தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய ஏழ்மை நிலை காரணமாக குழந்தைகளை மீள பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்,  குறித்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறி ஒருவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் இந்த இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறித்த குழந்தைகளின் தாயை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டாரா என்று சம்பந்தப்பட்ட  நபரிடம் நீதவான் கேட்டுள்ளார்.

எனினும் குறித்த குழந்தைகளின் தாயை சம்மந்தப்பட்ட நபர் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பூர்வமாக, மருத்துவ ரீதியாக குழந்தைகளின் தந்தை குறித்த நபர் தான் என உறுதிப்படுத்தப்படாமல் குழந்தைகளை குறித்த நபரிடம் ஒப்படைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

அதன் பின்னர் குறித்த இரட்டை குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.