
இம்ரான் கான் – உலகக்கிண்ண வெற்றி தொடக்கம் சிறையில் கண்பார்வை இழந்தது வரை
1992 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலக கிண்ண கோப்பையை வென்று கொடுத்த தலைவர், இம்ரான் கான்.
இம்ரான் கான் என அழைக்கப்படும் இம்ரான் அகமது கான் நியாசி, 1952 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி, பாகிஸ்தான் லாகூரில் பிறந்தார். 1975 இல் ஒக்ஸ்போர்ட் கேபிள் கல்லூரியில் (Keble College – University of Oxford) பட்டப்படிப்பை முடித்தார்.
கிரிக்கெட் வாழ்க்கை
தனது 18 ஆவது வயதில், கிரிக்கெட் விளையாட்டுக்குள் நுழைந்தார். 1971 இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தெரிவுப் போட்டியில் விளையாடினார், 1982 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணியின் தலைவராக அணியை வழிநடத்தி, பல போட்டிகளில் விளையாடினார்.
1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்றார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாற்றில் வென்ற ஒரே ஒரு உலகக்கிண்ணம் இது மட்டும் தான்.
1992 ஆம் ஆண்டு மெல்போர்னில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில், தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற இம்ரான் கான், அந்த போட்டியோடு தனது கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார்.
முன்னதாக 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற, இலங்கைக்கு எதிரான போட்டியோடு தனது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
தனது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், 88 டெஸ்ட் போட்டிகளில் 3,807 ரன்கள் எடுத்து, 362 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில், 175 போட்டிகளில் 3,709 ரன்கள் எடுத்து, 182 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
சமூக சேவை
1994 ஆம் ஆண்டு, “ஷௌகத் கானும் நினைவு புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் ஆராய்ச்சி மையம்” (Shaukat Khanum Memorial Cancer Hospital and Research Centre) என்ற கட்டமைப்பை நிறுவினார் இம்ரான் கான். அதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அங்கு அதிநவீன சிகிச்சை வசதிகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008 ஆம் ஆண்டு, நாமால் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இந்த பல்கலைக்கழகம், பாகிஸ்தான் மியான்வாலி (Mianwali) நகரில் உள்ள வறிய மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்கியது.
அரசியல்
நீதியான நேர்மையான ஊழலற்ற நாடு என்ற தொலைநோக்கில், “நயா பாகிஸ்தான்” (தமிழில் – புதிய பாகிஸ்தான்) என்ற எண்ணக்கருவில், 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) என்ற கட்சியை இம்ரான்கான் உருவாக்கினார்.
பல வருட அரசியல் போராட்டத்திற்குப் பிறகு, அவரது கட்சி 2018 ஆம் ஆண்டு, வரலாற்று வெற்றியை பெற்று, இம்ரான்கான் பாகிஸ்தானின் 22வது பிரதமர் ஆனார்.
2018–2022 வரையான அவரது பதவிக்காலத்தில், பல திட்டங்களை இம்ரான்கான் தொடங்கினார்.
வறுமை ஒழிப்பு மற்றும் நிதி உள்ளடக்கத்தை நோக்கமாகக் கொண்ட, பாகிஸ்தானின் மிகப்பெரிய சமூக நலத் திட்டமான, “எஹ்சாஸ்” (Ehsaas) திட்டத்தை 2019 ஆம் ஆண்டு தொடங்கினார்.
பல மில்லியன் குடும்பங்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கும் ஒரு உலகளாவிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான, “சேஹத் சாஹுலத்” திட்டத்தை 2019 ஆம் ஆண்டு தொடங்கினார்.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் ஆற்றிய சக்தி வாய்ந்த உரை மூலம், இம்ரான் கான் உலக அரங்கிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
அரசியலில் முடிவு
இம்ரான் கான், ஏப்ரல் 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பாகிஸ்தான் வரலாற்றில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் இம்ரான் கான் ஆவார். இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் பதிவாகின.
அவரது ஆட்சிக்காலத்தில் நிலவிய, வரலாறு காணாத கடுமையான பணவீக்கம், அன்னியச் செலாவணி இருப்பு சரிவு மற்றும் விலைவாசி உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால், முக்கிய கூட்டணி கட்சிகள் இம்ரானுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றன, மேலும் அவரது சொந்த கட்சியிலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அத்துடன், ஆரம்பத்தில் ராணுவத்துடன் இணக்கமாகச் செயற்பட்ட இம்ரான் கான், பின்னர் ராணுவத்துடன் முறுகத்தொடங்கியதாக சொல்லப்படுகின்றது. ராணுவத் தலைமைக்கும், இம்ரான் கானுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், அவரது வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
எனினும், பதவி நீக்கத்திற்கு அமெரிக்கா மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து சதி செய்ததாக, இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார்
இம்ரான் கான் கைது
இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, ஷபாஸ் ஷெரீப் பிரதமரானார்
பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின், ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான், அவ்வப்போது தன் ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி, வழக்கு ஒன்றின் விசாரணைக்கு முன்னிலையாகுவதற்காக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு சென்ற இம்ரான் கானை, பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
வேறொரு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை, அல்-காதர் பல்கலைக்கழக அறக்கட்டளைக்கு வழங்க உதவியதற்காக, மாலிக் ரியாஸ் என்பவருக்கு 190 மில்லியன் பவுண்டுகளை இம்ரான் கான் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில்தான் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார், என தெரிவிக்கப்பட்டது.
பிணையில் வெளிவர முடியாத பிடியானையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசமடையும் இம்ரான் கானின் உடல்நிலை
தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், அவரது கண்பார்வையை இழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது
தனது வலது கண்ணில் வெறும் 15 சதவீத பார்வை மட்டுமே எஞ்சியிருப்பதாக, இம்ரான் கான் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3-4 மாதங்களாக இம்ரான் கானுக்கு பார்வை மங்கலாகத் தெரிவதாகவும், சிறை நிர்வாகத்திடம் கூறியும் வெறும் கண் சொட்டு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டதாக, அவரது வழக்கறிஞர் சல்மான் சப்தார் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது வலது கண்ணின் விழித்திரையில், ஆங்காங்கே இரத்தக் கசிவு மற்றும் “காட்டன் வூல் ஸ்பாட்ஸ்” எனப்படும் வெள்ளைப் புள்ளிகள் கண்டறியப்பட்டன. இவை விழித்திரைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதைக் காட்டுகின்றன, என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரான் கானுக்கு ஆதரவு
அவ்வாறான நிலையில், இலங்கை மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் துறையினர், இம்ரான் கானின் விடுதலை தொடர்பில் அழுத்தங்களை கொடுக்குமாறு, தத்தமது அரசாங்கங்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“நாட்டுக்காக விளையாடி கௌரவமிக்க வெற்றியை பெற்றுத் தந்த ஒரு வீரனை, இவ்வாறு துன்பப்பட விடுவது மிகவும் வேதனையான விடயம்” என பல தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இலங்கை நாடாளுமன்றத்திலும், இம்ரான் கானின் விடுதலைக்காக, பாகிஸ்தான் அரசுக்கு இலங்கை அரசு அழுத்தம் கொடுக்குமாறு, எதிர்கட்சிகள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (minnal24news)
