
“இப்போது சாப்பிடு.. மரணித்த பின் பில் கட்டு” – பீட்சா நிறுவனத்தின் திட்டம்!
நியூசிலாந்தின் புகழ்பெற்ற ஹெல் பீட்சா என்ற நிறுவனம், “இப்போது வாங்கு, இறந்த பிறகு பணம் செலுத்து” என்ற வினோதமான திட்டத்தைக் கடந்த 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை அவர்கள் “பை நவ் லேட்டர் பே” (Buy Now, Pay Later) என்று அழைக்கிறார்கள்.
இந்தத் திட்டம் 666 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 666 பேரும் உயிருடன் இருக்கும் வரை எவ்வளவு பீட்சாவை வேண்டும் என்றாலும் இந்த நிறுவனத்தில் வாங்கிச் சாப்பிடலாம், அதற்கு ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
வாடிக்கையாளர்கள் உயிரிழந்த பிறகு தான் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இதற்காக, தங்களது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்துவதற்குச் சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் ஒரு பிரத்தியேக ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.
உயிரிழந்த பிறகு, பில் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், குடும்பத்தினர் தர வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெல் பீட்சா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென் கம்மிங் இது ஒரு விளம்பர யுக்தி என்றும், இதில் மறைமுகக் கட்டணம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
நியூசிலாந்து மக்கள் ‘இப்போது வாங்கு, பிறகு செலுத்து’ திட்டங்களால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டவே இந்த வினோதமான விளம்பரம் வடிவமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும் நியூசிலாந்தின் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தத் திட்டம் குறித்து அப்போது எச்சரித்திருந்தனர்.
இது அடிமையாக்கும் தன்மை கொண்டது என்றும், கடன் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும், இலவச பீட்சாவுக்கு ஆசைப்பட்டு இந்த வலையில் சிக்க வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்
