இன்ஸ்டாகிராம் விருந்து: 57 பேர் கைது

கம்பஹா – பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்து நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சாவுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அங்குத் தங்கியிருந்த 7 பெண் மற்றும் 34 ஆண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விருந்து நடைபெற்ற உணவகத்தின் உரிமையாளர் 03 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதுடன், அவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.