இன்றைய அகழ்விலும் சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது சிறார்களின் என்புக் கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி எஸ். வீ. நிரஞ்சன் தெரிவித்தார்.
இரண்டு சிறார்களின் என்புக்கூடுகளும், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, சேலை போன்றதொரு ஆடையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது முழுமையாக புதை குழியிலிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை
இந்தநிலையில், ஒரே இடத்தில் பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூடுகள் தொகுதியாக காணப்படுவதால் அவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மனித புதை குழியில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளில் இதுவரையில் சுமார் 40 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன.
அவற்றில் 34 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். வீ. நிரஞ்சன் குறிப்பிட்டார்