இன்று முட்டை கிடைக்காவிட்டால் பேக்கரிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாம் கட்ட முட்டைகளை இன்று சனிக்கிழமை பேக்கரி உரிமையாளர்களுக்கு விநியோகிக்க முடியும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த முட்டைகளின் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் இன்று தமக்கு அறிவிக்கும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, வெதுப்பக உரிமையாளர்களுக்கு உரியவாறு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 6 ஆயிரம் பேக்கரிகள் உள்ள நிலையில்,  20 பேக்கரிளுக்கு மாத்திரமே 35 ரூபாய்க்கு முட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பாரியளவான வெதுப்பக உரிமையாளர்களுக்கு 5 லட்சம் முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், தமது சங்கத்துக்கு மூன்றரை லட்சம் முட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்  அவற்றின் மூலம்  60 முட்டைகளை மாத்திரமே ஒரு பேக்கரிக்கு வழங்க முடியும்.

3 நாட்களுக்கு முன்னர் சுமார் 1 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் முட்டை கிடைக்கவில்லை.

இந்தநிலையில், இன்று முட்டை கிடைக்காவிட்டால், அந்த முட்டைகள் மூலம் தங்களுக்கு பயனில்லை என்றும், பேக்கரிகளை மூடிவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் செலுத்திய பணத்தை மீள கையளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.