இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

2025 செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த அமர்வானது இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ச்சியாக கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2) ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாளைய தினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.