இன்றும் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யும்

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று மேலும் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும், திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 315 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது .

நேற்று (27) காலை . 8.30 முதல் இன்று (28) அதிகாலை 4.30 வரையான காலப்பகுதியில் பதிவான மழைவீழ்ச்சி அளவுகளை கருத்திற்கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் அலம்பில் பிரதேசத்தில் 305 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 223.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.