இன்றும் அதிகளவான பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில
நாள்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது .

நாட்டின் பல பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.