இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் முற்றுப்புள்ளி வையுங்கள்: மரியதாஸ்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியா செல்லும் எமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
நாம் பலமுறை இந்திய தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் தொடர்ச்சியாக நமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றன.
இந் நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முதல் பயணமாக எதிர்வரும் வாரம் இந்தியா செல்ல உள்ளதாக அறிகிறோம்.
இந்திய இழுவைமடி படகுகளினால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வருவதை இலங்கை ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் நன்கு அறிவார்கள்.
ஆகவே எமது மீனவர்களின் நீண்டகால பிரச்சனை யான இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய பிரச்சனை இந்திய பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசி எமது ஜனாதிபதி அனுர தீர்த்து வைப்பார் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்