
இந்தியா சென்று பேச்சு நடத்த சஜித்தும் நாட்டம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தூதுக்குழுவினர் தற்போது இந்தியாவுக்குச் சென்று முக்கியமான உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்திவருவதன் பின்னணியில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை நாடியிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் கடந்த திங்கட்கிழமை முதல் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அவரது தோழர்களும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், வெளியுறவு செயலாளர் வினாய் மோகன் ஆகியோருடன் பேச்சுவாரத்தைகளை நடத்தியிருந்தார்கள்.
தங்களது இந்திய விஜயத்தின் போது திசாநாயக்கவும் குழுவினரும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் உள்ள தெனானிந்திய மாநிலமான கேரளாவுக்கும் சென்று பல தரப்பினருடனும் பேசுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுடனான அத்தகைய ஊடாட்டத்தின் மூலமாக தேசிய மக்கள் சக்தி அரசியல் அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இந்தியாவுக்கு செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவதில் நாட்டம் கொண்டிருப்பதாக தெரியவருகிறது.
