இந்தியா உடனடியாக 65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்க உள்ளது

வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை வழங்க உள்ளது.

நாட்டிற்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை வழங்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடமிருந்து இலங்கைக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியைச் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து, இலங்கையில் நடப்பு “யாலப்” பயிர்ச்செய்கைப் பருவத்திற்குத் தேவையான 65,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க இந்தியா எடுத்த முடிவிற்கு நன்றி தெரிவிததுள்ளார்.

தற்போதுள்ள 01 பில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடனின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து யூரியா ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அளவு யூரியாவை உடனடியாக இலங்கைக்கு வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

“யால”  என்பது இலங்கையில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நெல் சாகுபடியின் பருவமாகும்.

இலங்கையில் 2 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர் மற்றும் அதன் 22 மில்லியன் மக்களில் 70 சதவீத வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தை நம்பியுள்ளனர்.

கொழும்பை தளமாகக் கொண்ட வெரிடே ரிசர்ச் நடத்திய விவசாயிகளின் ஆய்வில், தடை விதிக்கப்பட்ட பின்னர் 44 சதவீத விவசாயிகள் அறுவடையில் சரிவை சந்தித்தாலும், 85 சதவீத விவசாயிகள் எதிர்காலத்தில் அறுவடையில் சரிவை எதிர்பார்த்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடனில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இந்தியா 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்கள், கடன் வரிகள் மற்றும் கடன் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் உறுதியளித்துள்ளது.

ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், நாட்டு மக்களுக்கான  அர்ப்பணிப்பு தொடரும் எனவும்,  இந்தியா உறுதியளித்துள்ளது.

நேபாளத்திற்கு அடுத்தபடியாக உரம் வழங்குவதற்கான இந்தியாவின் உத்தரவாதத்தைப் பெற்ற இரண்டாவது நாடு இலங்கையாகும்.