
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன
-யாழ் நிருபர்-
வடக்குக்கான புகையிரதப் பாதையை திருத்துவதற்காக இந்திய அரசாங்கம் (98 மில்லியன் அமெரிக்க டொலர்) 3ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்களைத் தந்துதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பரீட்சாத்த வெள்ளோட்ட புகையிரத சேவையில் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐந்து மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமான புகையிரத சேவைகள் புகையிரதப் பாதை திருத்துவதற்காக நிறுத்தப்பட்டது.
இந்திய அரசாங்கம் அனுராதாபுரம் தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரத பாதைகளை திருத்துவதற்கு பாரியதொரு நிதி பங்காளிப்பை வழங்கியமை வடக்குக்கான நிறுத்தப்பட்ட புகையிரத மார்க்கத்தை விரைவுப்படுத்துவதற்கு உதவியாக அமைந்தது.
அதேபோல இந்திய அரசினால் இலங்கைப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்காக புதிய பேருந்துகள் வழங்கப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.
