இந்தியாவின் 77வது குடியரசு தின விழா: ஒடிசாவில் நாமல் ராஜபக்ஷ ஆற்றிய சிறப்புரை

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப நிறுவனத்தில் (KIIT) நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட நாமல் ராஜபக்ஷ, பொறுப்புள்ள தலைமைத்துவம், பிராந்திய ஒற்றுமை மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.

“தலைமைத்துவம் என்பது ஒரு பதவி அல்ல; அது ஒரு பொறுப்பு. பொதுவான இலக்குகளை அடைவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறை,” என மாணவர்களிடையே அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மட்டுமல்லாது, விளையாட்டிலும் சிறந்த தலைவர்களை உருவாக்குவதில் கலிங்கா கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும், ‘டிட்வா’ புயல் பாதிப்பின் போதும் இந்தியா வழங்கிய உதவிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“தெற்காசியாவில் ஒற்றுமை என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது ஒரு நடைமுறைத் தேவை,” என அவர் வலியுறுத்தினார்.

பேரிடர் காலங்களில் ஒடிசா மாநிலம் பின்பற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மீட்புத் திட்டங்களிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான கலாசார பிணைப்புகளைக் குறிப்பிட்ட அவர், ராமாயணக் கதைகள் மற்றும் கிரிக்கெட் மீதான இரு நாடுகளின் ஆர்வம் ஆகியவை இரு தேசங்களையும் ஒன்றிணைப்பதாகக் கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போன்ற தலைவர்களை உருவாக்கிய ஒடிசாவின் பெருமையை அவர் நினைவு கூர்ந்தார்.

மாறிவரும் உலகளாவிய அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில் இந்தியப் பெருங்கடல் பகுதி முக்கியத்துவம் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து, பகிரப்பட்ட பொறுப்புணர்வுடன் பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும் திறமை, பண்பு மற்றும் துணிச்சலுடன் தலைமைத்துவத்தை ஏற்குமாறு இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார். “நெறிமுறைகள் இல்லாத அதிகாரம் சுரண்டலுக்கே வழிவகுக்கும்,” என்றும் அவர் எச்சரித்தார்.