
இத்தாலி வேலைவாய்ப்பு மோசடி : நடிகர் ஒருவர் உட்பட மூவர் கைது
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரில் பல பிரபலமான உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடடித்த துணை நடிகரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இத்தாலியில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து பொதுமக்களிடமிருந்து 500,000 தொடக்கம் 2 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் பாணந்துறை வலன பொலிஸ் ஊழல் ஒழிப்பு செயலணியின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடிகர் பல ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளதாகவும், அந்த அமைப்புகளால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டைகளை வைத்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணினியில் உருவாக்கப்பட்ட போலி இத்தாலிய விசா மற்றும் விமான டிக்கெட்டுகளை காட்டி பொதுமக்களை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
குறித்த நடிகர் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டதாகவும், மற்ற இருவரும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
