இது வரை காலமும் தமிழர்களுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளது: யோகேஸ்வரன் தெரிவிப்பு.

-மட்டக்களப்பு நிருபர்-

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பூர்வீகமாக இந் நாட்டில் வாழும் தமிழர்களுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போதைய தேர்தல் நிலை தொடர்பில் மட்டு ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய நிலையில் அவர்களது பிரச்சாரங்கள் தீவிரமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

கடந்த காலங்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்த காரணத்தினால் சிங்கள ஜனாதிபதிகளுக்காக கடும் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தேன்.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் போட்டியிட்டவருக்காக நாங்கள் வேலை செய்தோம். ஆனால் நாம் இதுவரை சிங்கள ஜனாதிபதிகளுக்காகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.

தமிழ் மக்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள். அவர்கள் இந்நாட்டில் பல ஆண்டுகளாகத் துன்பியலை அனுபவித்து வருகிறார்கள்.இவர்களுக்கான தீர்வு எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாகவும்,ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்த காலத்தில் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டாலும் அதனால் பயனேதும் ஏற்படவில்லை.

கல்முனைப் பிரதேச சபை விடயம் கூட ரணில் விக்கிரமசிங்கவால் நிறைவேற்றப்படவில்லை.சஜித் பிரேமதாஸ காலத்தில் பௌத்த விகாரைகளை அமைப்பதில் ஈடுபாடு காட்டியதை மறந்துவிட முடியாது. அடுத்து அனுரகுமார திஸாநாயக்காவைப் பொறுத்த வரையில் ஊழலுக்கெதிராகச் செயற்படக் கூடியவர்கள். எனினும் வடக்கு கிழக்கு பிரிய ஊன்றுகோலாகச் செயற்பட்டார்கள்.  இந்நிலையில் மூவரும் எமக்கான தீர்வைத் தரப் போவதில்லை.

இந்நிலையிலேயே பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் மற்றும் அரசியற் கட்சிகளால் ஜனாதிபதி வேட்பாளராக பா.அரியநேத்திரனை நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நான் ஆதரிப்பதாகத் தீர்மானம் எடுத்துள்ளேன். இந்நிலையில் அனைவரும் எதிர்வரும் 21 ஆம் திகதி சங்குச் சின்னத்துக்கு வாக்களிப்போம் – என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்