
இணைய மோசடியாளர்களிடம் சிக்காமல் இருக்க அதிரடி ஆலோசனைகள்!
டெலிகிராம் (Telegram), வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணையத்தில் பார்க்கும் பொருட்களுக்காக முன்பணம் செலுத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் .
மேலும் ‘Cash on Delivery’ (பொருள் கிடைத்த பின் பணம் செலுத்துதல்) முறையை அல்லது நேரில் சந்தித்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் முறையை மட்டும் பின்பற்றுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அறிமுகமில்லாதவர்களைச் சந்திக்கும் போது தனியாகச் செல்ல வேண்டாம் எனவும் மக்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுகுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம். பல மோசடியாளர்கள் மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகளையே பயன்படுத்துகின்றனர் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
