இணையவெளி பாதுகாப்பு சட்டம் தொடர்பான சர்ச்சை

 

-இரா. முகிலன்-

ஆசிய இணையக் கூட்டமைப்பு உட்பட உலகின் முக்கியமான இணைய மற்றும் தொழில்நுட்ப கம்பனிகள், உள்நாட்டு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஊடகத்துறை அமைப்புக்கள், சிவில் சமூகம் மற்றும அரசியல் கட்சிகளின் கடுமையான விமர்சனங்ளை அலட்சியம் செய்து இலங்கை அரசாங்கம் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை (Online Safety Bill ) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் இந்த சட்டமூலத்தை அவசரப்பட்டு நிறைவேற்றுவதை தவிர்த்து மீண்டும் பரந்தளவிலான கலந்தாலோசனைக்கு வாய்ப்பைத் தருமாறு விடுக்கப்பட்ட எந்த வேண்டுகோளையும் செவிமடுக்க அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.

இரு நாள் விவாதத்தின் முடிவில் கடந்த புதன்கிழமை இரண்டாவது வாசிப்பின்போது வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன. மூன்றாவது வாசிப்பிற்கு பிறகு வாக்கெடுப்பு இல்லாமலேயே அது நிறைவேறியது.

கடந்த வருடம் செப்டெம்பர் நடுப்பகுதியில் முதன்முதலாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்புப் பொருத்தப்பாட்டை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் பெருவாரியான திருத்தங்களை சிபாரிசு செய்திருந்தது. உயர்நீதிமன்ற ஆராய்வின்போது முப்பதுக்கும் அதிகமான திருத்தங்களை முன்வைக்கப்போவதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றம் சிபாரிசு செய்த திருத்தங்கள் எல்லாமே பாராளுமன்ற விவாதத்தின்போது குழுநிலையில் சட்டமூலத்தில் உள்வாக்கப்பட்டிருக்கவில்லை என்று சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சி சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை அங்கீகரித்து கையெழுத்திடுவதற்கு முன்னதாக பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.

வெள்ளியன்று கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் இது குறித்து கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உயர்நீதிமன்றம் சிபாரிசு செய்த பொருத்தமான திருத்தங்கள் உள்வாங்கப்படுவதற்கு முன்னதாக சபாநாயகர் சட்டமூலத்தை அங்கீகரித்தால் பாராளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

அதேவேளை, கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை கூட்டாமல் சட்டமூலத்தை சபாநாயகர் அங்கீகரித்தாலும் அதற்கு எதிராக எதையும் செய்துவிட முடியாது என்று ராஜகருணா கூறவும் தவறவில்லை.

சகல திருத்தங்களும் உள்வாங்கப்படாத நிலையில் சபாநாயகர் சட்டமூலத்தை அங்கீகரித்தாலும் கூட அது நீதித்துறையை அவமதிப்பதாகிவிடாது. பாராளுமன்றத்தின் விவகாரங்களில் நீதித்துறை தலையீடு செய்யமுடியாது என்பது சட்டநிபுணர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் இதை தொலைக்காட்சி சேவை ஒன்றின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து சபையில் உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலஸ் இந்த சட்டத்துக்கு மேலும் பல திருத்தங்கள் பின்னர் ஒரு கட்டத்தில் கொண்டுவரப்படும் என்று கூறினார். இதுவே சகல திருத்தங்களும் உள்வாங்கப்படவில்லை என்ற சந்தேகத்தைக் கிளப்பியது.

பாராளுமன்ற விவாதத்தின்போது குழுநிலையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் சட்டமா அதிபரினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன என்று சபை முதல்வரும் கல்வியமைச்சருமான சுசில் பிரேமஜயந்த கூறியதை நோக்கும்போது சட்டமா அதிபரினால் அங்கீகரிக்கப்படாமல் இன்னமும் திருத்தங்கள் இருக்கின்றன என்ற அர்த்தம் தொனிக்கிறது.

பின்னர் ஒரு கட்டத்தில் மேலும் பல திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டியிருக்கின்ற போதிலும், சட்டமூலத்தை நிறைவேற்றிவிடுவதில் அரசாங்கம் அவசரம் காட்டியிருக்கிறது.

இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் முதலில் வர்த்தமானியில் வெளியானபோது சட்டமா அதிபர் திணைக்களம் அதை உகந்த முறையில் வாசித்து ஆராயவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கும் அரசியலமைப்பு சட்டநிபுணர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன பாராளுமன்ற விவாதம் இரு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. உடனடியாக அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது என்பது வெளிப்படையானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்த சட்டம் மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீது படுமோசமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. இதுவே அதிகப் பெரும்பாலானவர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது.முகநூலில் ஒரு விருப்பத்தை (Like ) தெரிவிப்பது கூட ஒரு அபிப்பிராய லெளிப்பாடேயாகும். இந்த சட்டத்தின் பரந்தளவிலான வரைவிலக்கணங்களை நோக்கும்போது அரசாங்கம் விரும்பாத பதிவு ஒன்றை ஒருவர் விரும்பினாலும் கூட அவருக்கு எதிராக சட்டம் பாயக்கூடிய ஆபத்து இருக்கிறது.

“இன்று பெரும்பாலான பொது விவாதங்கள் இணையத்திலேயே இடம்பெறுகின்றன. மக்கள் தங்களுக்கு இடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் தகவல்களை வெளியிடுவதற்கும் சமூக ஊடகங்களையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

“முக்கியமான இரு தேர்தல்கள் வரவிருக்கின்றன. இணையவெளியில் பெருமளவு விவாதங்களும் பிரசாரங்களும் இடம்பெறும். இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றிவிடுவதில் அரசாங்கம் காட்டிய அவசரமும் உறுதிப்பாடும் இது தேர்தலை இலக்காகக் கொண்டிருக்கிறது என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. மற்றைய நாடுகளில் இத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு பல வருடங்கள் பிடித்தன” என்று கலாநிதி விக்கிரமரத்ன கூறுகிறார்.

சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதே இணையவெளி பாதுகாப்பு சட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கம் கூறியபோதிலும், அது அரசியல் தொடர்பாடல்களுக்கு இணையத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் பாரதூரமான ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்பதே எதிரணி அரசியல் கட்சிகள்,மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் விமர்சனமாக இருந்து வந்திருக்கிறது.

தகவலைப் பெறுவதற்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் உட்பட மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் சட்டம் கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு சில மாதங்களுக்கு முன்னரேயே கூறியிருந்தது.

அரசாங்க அதிகாரிகள் தங்களுக்கு இணக்கமில்லாத கருத்து வெளிப்பாடுகளை ‘பொய்யான அல்லது தவறான வாசகம் ‘ (False Statement ) என்று வகைப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு தங்குதடையின்றிய தற்துணிபு அதிகாரத்தை கொடுப்பதாக சட்டம் அமைந்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

சட்டத்தின் பல பிரிவுகள் இணையவெளிக் குற்றங்கள் தொடர்பில் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட பதங்களையும் வரைவிலக்கணங்களையும் கொண்டவையாக இருப்பதால் அநியாயமான முறையிலும் விருப்பு வெறுப்புக்கள் சார்ந்தும் வியாக்கியானம் செய்வதற்கு கணிசமான வாய்ப்பைக் கொடுக்கின்றன. அதனால் ஏறத்தாழ நியாயபூர்வமான கருத்து வெளிப்பாடுகள் சகலதும் குற்றங்களாகக் கருதப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதனால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீது பாரதூரமான தாக்கத்தை ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அந்த அலுவகம் எச்சரிக்கை செய்தது.

இணையத்தள ஊடகங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் பணிக்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இணையவெளிப் பாதுகாப்பு ஆணைக்குழுவை (Online Safety Commission ) ஜனாதிபதி நியமிப்பதற்கு வகைசெய்யும் ஏற்பாட்டை சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு கொண்டிருந்தது.

எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் இணையவழிப் பிரசுரங்களையும் தடைசெய்வதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையக் குற்றங்களுக்கு சிறைத் தண்டனையையும் கூட சிபாரிசு செய்யமுடியும்.

அரசியலமைப்புக்கான 21 வது திருத்தத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களின் பெயர்களை அரசியலமைப்பு பேரவை சிபாரிசு செய்வதற்கு வகைசெய்யும் ஏற்பாட்டுக்கு புறம்பாக இணையவெளிப் பாதுகாப்பு விவகாரத்தில் ஆணைக்குழுவின் முழு உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமிப்பதற்கும் பதவிநீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு வழங்கும் ஏற்பாடு சட்ட மூலத்தின் ஆரம்ப வரைவில் இருந்தது.

ஆனால் அந்த ஏற்பாட்டை மாற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறிய யோசனையை அரசாங்கம் தவிர்ககமுடியாமல் ஏற்றிருக்கிறது.

அதன் பிரகாரம் இணையவெளிப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு மாத்திரமே சிபாரிசு செய்யவேண்டும். பேரவை அவர்களை அங்கீகரிக்கவேண்டும். அதே போன்றே ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் எவரையாவது நீக்கவேண்டும் என்றாலும் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் வேண்டும்.

எந்தவொரு தடைசெய்யப்பட்ட விடயதானத்தையும் மூன்று தடவைகள் பிரசுரித்ததாக காணப்படும் எந்தொரு இணையச் சேவை வழங்குனரையும் இடைநிறுத்துவதற்கான அதிகாரம் சட்டமூலத்தின் முதல் வரைவில் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் சிபாரிசின் பேரில் அந்த அதிகாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறாக முக்கியமான சில மாற்றங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும்,உயர்நீதிமன்றம் சிபாரிசு செய்தும் கூட அரசாங்கம் இன்னமும் உள்வாங்காத திருத்தங்கள் எவை என்பதை எதிர்க்கட்சி விளக்கமாக கூறவில்லை.

இணையவெளி பாதுகாப்பு சட்டம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதற்கு அப்பால் இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்று ஆசிய இணையக் கூட்டமைப்பு எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதனிடையே, உயர்நீதிமன்றம் சிபாரிசு செய்த திருத்தங்கள் எல்லாம் உரியமுறையில் உள்வாங்கப்பட்டிருக்கி்ன்றனவா இல்லையா என்பதை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக ஆராயவிருப்பதாக சபாநாயகர் அறிவித்திருப்பதாக பிந்திய செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

அவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆராய்வுக்குப் பிறகு பாராளுமன்ற அதிகாரிகள் குழுவொன்றும் அதை ஆராயும். அதற்கு பின்னரே சட்டமூலத்தை அங்கீகரித்து கைச்சாத்திடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியதாக தெரியவருகிறது.