இடம்மாற்றத்தினை ரத்து செய்யக்கோரி ஆளுநரை சந்திக்க சென்றுள்ள மட்டு, அம்பாறை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இடம்மாற்றத்தினை ரத்துச் செய்யுமாறு கோரிக்கையை முன்வைக்க, கிழக்கு மாகாண ஆளுநரை இன்று புதன்கிழமை சந்திக்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என, 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வெளிமாவட்டங்களுக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்மாற்றம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்களுடைய அடிப்படை சம்பளம் 60 தொடக்கம் 70 ஆயிரம் ரூபா. இவ்வாறான நிலையில், வேறு மாவட்டங்களுக்கு சென்று பணியாற்றுவதில் தாங்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், என அவர்கள் தெரிவிக்கின்றனர்

கடந்த பல வருடங்களாக, யுத்த காலத்திலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடமையாற்றி, தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையில், இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றம், தமக்கு உள,உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கவலை தெரிவித்தனர்.

பணிக்காக வேறு மாவட்டங்களுக்கு சென்று வருவதாயின், தாம் பெறும் சம்பளம் போக்குவரத்திற்கு மாத்திரம் போதுமானது எனவும், இதனால் தங்களது குடும்பம் பாதிக்கப்படும் எனவும், கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தும், தமக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை, என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட இடம்மாற்றத்தினை ரத்து செய்யக்கோரி, 30 பேர் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று புதன்கிழமை, கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து, தமது கோரிக்கை முன்வைக்க திருகோணமலைக்கு சென்றுள்ளனர்.