இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசத் தவறியதற்காக இலங்கை அணியின் வீரர்களுக்கு அவர்களது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற போட்டியில், நேரச் சலுகைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரும் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர் வீதத்தை விட மூன்று ஓவர்கள் குறைவாக வீசியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது. ICC விதிமுறைப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, முன்மொழியப்பட்ட அபராதத்தையும் ஏற்றுக்கொண்டதால் முறையான விசாரணை தேவையில்லை என ICC தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை கள நடுவர்கள் வேன் நைட்ஸ், கிரஹாம் லொயிட், மூன்றாவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டொக் மற்றும் நான்காவது நடுவர் ஜேம்ஸ் மிடில்புரூக் ஆகியோர் முன்வைத்தனர்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.










