ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 வருடங்கள் : தேசிய பாதுகாப்பு தினம் இன்று!

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இன்று அனுட்டிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்திற்கு இணையான பிரதான நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகச்சி பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறவுள்ளது.

இதுதவிர, மாவட்ட மட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்குண்டு 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

இலங்கை எதிர்கொண்ட பாரிய இயற்கை அனர்த்தமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்