ஆற்றில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

ஊவா பரணகம ரத்தம்ப தியகொலார ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த இளைஞன் தனது உறவினருடன் ஆற்றுக்குச் நீராட சென்ற நிலையில், ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து இளைஞனை மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு