இலங்கை மத்திய வங்கி (CBSL), ஆறு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களுக்கு எதிராக சொத்து முடக்க உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி, குறித்த நிறுவனங்கள் மற்றும் பணிப்பாளர்கள் தங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் ஏனைய உடைமைகளை விற்பனை செய்வது, மாற்றுவது அல்லது வேறு வழிகளில் கையாள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் 44ஆவது பிரிவின் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவை உறுதிப்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
தற்போது சொத்து முடக்க உத்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் வருமாறு
- Kasagala Green Plantation (Private) Limited
- Ceylon Green Life Plantation (Private) Limited
- Singhe Capital Investment Limited
- Pro Shop Advertising Holdings (Private) Limited
- Athens International Education Centre (Private) Limited
- Eyon Lanka Investment & Film Production International Company (Private) Limited
Kasagala Green Plantation மற்றும் Ceylon Green Life Plantation ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் நிதி வர்த்தகச் சட்டத்தின் 42ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மற்றைய நான்கு நிறுவனங்கள், குறித்த சட்டத்தின் 2ஆவது பிரிவை மீறி நிதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்றதாகவும் மத்திய வங்கி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே பொதுமக்கள் தங்களது பணத்தை வைப்பிலிடுமாறு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிச் சட்டம் அல்லது நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற நிறுவனங்கள் அல்லது குறித்த சட்டங்களிலிருந்து முறையாக விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத நிதி வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெறுவது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், மேலும் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Kasagala Green Plantation நிறுவனம் நிதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதா அல்லது நிதி வர்த்தகச் சட்டத்தை மீறி பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்றதா என்பதைக் கண்டறிவதற்காக அந்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்தி வருவதாக மத்திய வங்கி முன்னதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










