
தொழில்நுட்பம் மூலம் ஆசிரியரின் உருவத்தை மாற்றி வடிவமைத்த 15 வயது மாணவர்கள்
கல்வி கற்றுக் கொடுக்கும் தமது ஆசிரியையே, Ai தொழில்நுட்பம் மூலம் ஆபாச படங்களாக உருவாக்கிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணை
முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர் குழு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அந்த பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்கள், பாடசாலையில் ஒரு இளம் பெண் ஆசிரியையின் முகத்தை வைத்து நிர்வான உடலின் புகைப்படங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவர் கண்டி பொலிஸை அணுகி, சம்பவம் தொடர்பாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், கண்டி சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாடசாலைக்குச் சென்று, மாணவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மடிக்கணினி மற்றும் இரண்டு மொபைல் போன்களைக் கைப்பற்றி விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்டி பிரிவுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.