ஆண்டு இறுதியில் நேர்ந்த சோகம்

2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31நேற்று புதன்கிழமை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குருநாகல் – புத்தளம் வீதியின் ஹிரிகொல்ல பகுதியில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளியும் மோதியதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த இவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், நிலாவெளி – தெஹிவத்தை வீதியின் மூதூர் – குங்குவெளி சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.அவருடன் பயணித்த ஏனைய இருவர் பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பங்கதெனிய – ஆணமடுவ வீதியின் குமாரகட்டுவ பகுதியில் உந்துருளி ஒன்றும் உழவு வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மேலும், கொழும்பு – பியகம வீதியின் பட்டிய சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற பாரவூர்தி மோதியதில் பின்னால் அமர்ந்து பயணித்த 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தளம் – குருநாகல் வீதியின் மல்லங்குளம் பகுதியில் உந்துருளி மீது நோயாளர் காவு வண்டி ஒன்று மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.