இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பதிரண, ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று இரவு ஜப்பான் நோக்கிப் புறப்படவுள்ளார். 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் 19 முதல் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை ஐச்சி–நகோயா பகுதியில் நடைபெறுகின்றன.
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முக்கிய பதக்க எதிர்பார்ப்புகளில் ஒருவராக ருமேஷ் தரங்க உள்ளார். உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள அவர், இந்த ஆண்டில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து வருகிறார். அண்மையில் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற World Athletics Ultimate Championship போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தயாரிப்புகளுக்கு இடையில், வெளிநாட்டுப் பயணத்தின் போது ருமேஷ் தரங்க பயன்படுத்திய ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்திருந்தன. இதையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சு அவருக்காக புதிய ஈட்டித் தொகுப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அந்த புதிய ஈட்டிகள் ஜப்பானை சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது பயிற்றுநர் டோனி பிரசன்ன தெரிவித்துள்ளார்.
ருமேஷ் தரங்க பங்கேற்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று செப்டெம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கைக்காக சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்யும் எதிர்பார்ப்புடன் அவர் ஜப்பான் செல்கிறார்.










