ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் அவருக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஊடகங்களுக்கோ பொதுமக்களுக்கோ தெரிவிக்கப்படாமல் சூகி குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது சட்டத்தரணிகளுக்கு தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

சூகி தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை, சந்தை விலைக்குக் குறைவான விலையில் பொது நிலத்தை வாடகைக்கு எடுத்தமை, அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்து வீடு கட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது நீதிமன்றில் முன் வைக்கப்பட்டது.

இருப்பினும், 77 வயதான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

மேலும் அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய நம்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேச துரோகம், ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.