அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிர்ச்சி

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான சலுகைகள் கடந்த 2024 ஆம் ஆண்டில் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சிங்கள செய்தித்தாளொன்று குறிப்பிட்டுள்ளது.

இதனால், தகுதியுடைய பயனாளிகளுக்குக் குறித்த சலுகைகள் கிடைக்காமல் போக அல்லது இழக்க நேரிடும் என்று கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தக் குறைபாட்டைத் தீர்ப்பதற்காக, நலன்புரி நன்மைகள் சபை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலும் பொருத்தமான ஒரு பொறிமுறையை நிறுவி செயற்படுத்தவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கணக்காய்வு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும’ திட்ட விதிகளுக்கு அமைய, தகுதியுடைய நபர்களுக்குப் பலன்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கணக்காய்வு பரிந்துரை செய்துள்ளது.

இந்தத் தகவல், நலன்புரிச் நன்மைகள் சபை தொடர்பான 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.