அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற தற்போது வறுமை மற்றும் தீவிர வறுமை சமூகக் குழுக்களுக்குரிய 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் நிதி மற்றும் ஒத்துழைப்புக்களின் பிரகாரம் முன்னோடிக் கருத்திட்டங்கள் இரண்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
குறித்த முன்னோடிக் கருத்திட்டங்களின் பொறிமுறைக்கமைய அடையாளங் காணப்பட்ட வறுமை மற்றும் தீவிர வறுமைக் குடும்ப அலகொன்றுக்கு அவர்களின் வியாபாரம் அல்லது மற்றும் தொழில் திட்டங்களின் அடிப்படையிலும், அவர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு 150,000 ரூபாய் உயர்ந்தபட்ச தொகைக்கமைய நிதியுதவி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த முன்னோடி வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் 143 பிரதேச செயலகப் பிரிவுகளில் 839 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23,775 பேருக்கு 2025 தொடக்கம் 2027 வரையான காலப்பகுதியில், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உத்தேச நிதியுதவியை வழங்குவதற்காக கிராம அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.