அவுஸ்திரேலியாவில் இலகுரக வானூர்தி விபத்து

தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) பகுதியில் இடம்பெற்ற இலகுரக வானூர்தி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அடிலெய்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கூல்வா சவுத் (Goolwa South) அருகேயுள்ள லாங் பே (Long Bay) பகுதியில், இலகுரக வானூர்தி ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்த விபத்தில் 57 வயதுடைய விமானி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அவுஸ்திரேலிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியக (ATSB) அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

வானூர்தி விபத்துக்கான காரணம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து அவர்கள் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.