பெண் மருத்துவர் கொலை : சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்!

இந்தியா கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை2-ம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக பொலிஸ் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது மத்திய தடயவியல் குழு, சிபிஐ குழுவை சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 3 மணி நேரம் சஞ்சய் ராயிடம் விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

கடந்த 8 ஆம் திகதி இரவு நானும் எனது நண்பரும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினோம், அன்றிரவு இருவரும் சேர்ந்து இரு சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்றோம், அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தோம், பின்னர் எனது காதலியுடன் செல்போனில் பேசினேன், ஆடையின்றி இருக்கும் புகைப்படங்களை அனுப்புமாறு அவரிடம் கேட்டேன்.

கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 4.03 மணிக்கு ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்துக்கு சென்றேன், அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தேன், பின்னர் கொல்கத்தா காவலர் குடியிருப்பில் உள்ள நண்பர் அனுபம் தத்தாவின் வீட்டுக்குச் சென்றேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, ஜோதிபிரியா மாலிக் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ள சிறையில், அவர்களுக்கு அருகில் உள்ள அறையில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்