அளவில்லாத புண்ணியங்களையும் அள்ளிக் கொடுக்கும் ஐப்பசி மாதம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் அக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பித்து, நவம்பர் 15ஆம் திகதி வரை உள்ளது.

ஐப்பசி மாதம் தீபாவளி, கந்தசஷ்டி விரதம், சூரசம்ஹாரம், அன்னாபிஷேகம் என பலவிதமான சிறப்புக்களை கொண்ட மாதமாக உள்ளது. இது கொண்டாட்டத்திற்கு உரிய மாதம் மட்டுமல்ல, அளவில்லாத புண்ணியங்களையும் அள்ளிக் கொடுக்கும் மாதமாகும். பாவங்களை போக்கி, பலவிதமான நன்மைகளை தரக் கூடிய மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் இந்த ஒரு விஷயத்தை செய்வதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

ஐப்பசி மாதம் என்பது சூரிய பகவான், துலாம் ராசியில் தன்னுடைய பயணத்தை துவங்கும் மாதமாகும். அதனால் இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. ஐப்பசி மாதத்தில் நடைபெறும் மிக சிறப்பான விஷயங்களில் ஒன்று காவிரி துலா ஸ்நானம். அதாவது துலாம் மாதத்தில் காவிரி நதியில், அனைத்து புண்ணிய நதிகளும் சங்கமிப்பதாக ஐதீகம்

துலாம் மாத காவிரி நீராடல்

துலாம் மாதத்தில் காவிரி நீராடல் பற்றி பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரிக்கு மருத்வ்ருதா என்ற பெயர் உண்டு. மருத்-காற்று, வ்ருதா-விரிவடைந்தது. காற்றினால் விரிவடைந்ததால் காவிரி என்றாயிற்று.

மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காகவே இருப்பவள். உலகத்தையும் செழிப்பாக ஆக்குபவள் இவளே. வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம், காவிரியைப் போற்றுகிறது. மஹாபாரதம் காவிரியின் ஸ்நாந பலனைச் சொல்கிறது. இங்கு ஸ்நாநம் செய்தால் 100 பசுக்களை தானம் செய்வதற்கு சமம் என சொல்லப்படுகிறது.

பாவங்கள் போக்கும் காவிரி நீராடல்

ஸஹ்ய மலையில் பிறந்து ரங்கநாதனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு ஓடி வரும் போது சந்தனம் போன்ற உயர்ந்த பொருள்களைக் கொண்டு வருகிறாள்.பெரிய பெருமாள் திருப்பாற்கடலில் இருந்து காவேரிக்காக திருவரங்கம் வந்தார்.

ஒரு சமயம் கங்கை போன்ற நதிகள் ப்ரம்மாவை சரண் அடைந்தன. எல்லோரும் தங்கள் பாவத்தை எங்களிடம் சேர்க்கின்றனர். அந்த பாவங்களை தங்களால் தாங்க முடியவில்லை என்ன செய்வது என்று கேட்கும் போது, துலா மாத ஸ்நானம் செய்யும் போது உங்களின் பாபம் தொலையும் என்றார்.

துலா மாதம் துலா ஸ்நானம் செய்யும்போது அவையெல்லாம் நீங்கி விடும். இவள் புண்ணிய தீர்த்தங்களின் பாபச் சுமையையும் போக்குவாள் என்றார்.