அறுகம்பேயில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உழைத்தோர் பாராட்டி கௌரவிப்பு

உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் சனிக்கிழமை பொத்துவில் அறுகம்பே நியு ரைஸ்டார் பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.

“சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்” எனும் தொனிப்பொருளிலில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜஃபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் பிரதம அதிதியாகவும் அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் எம்.ஜீ.பிரியந்த, சுற்றுலா பணியகத்தின் பொது முகாமையாளர் டொக்டர் ஆர்.ஞானசேகர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், சுற்றுலா தொழில்சார் பிரதிநிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறுகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர், கிளீன் ஸ்ரீலங்கா அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அறுகம்பே பிரதேசத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கும் அங்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி சிறந்த சேவைகளை வழங்குபவர்கள், அதனோடு தொடர்புபட்ட நிறுவனங்கள் இதன்போது சான்றுதழ் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டன.

அத்துடன் அறுகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு தினமும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் பொலிஸார் உள்ளிட்ட முப்படையினரின் சேவைகளையும் பாராட்டி இந்நிகழ்வில் கலந்துகொண்ட முப்படை உயர் அதிகாரிகள் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து பொத்துவில் சிங்கள மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் குறித்த மன்றத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.