அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் இந்தியா : இலங்கை எதிர்நோக்கியுள்ள சிக்கல்
இந்தியா தனது அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதால், இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடைத்த அரிசி ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், ஏற்றுமதிக்கான அரிசி வகைகளுக்கு 20 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உடைத்த அரிசியை இறக்குமதி செய்யும் சீனா, இலங்கை மற்றும் பல ஆபிரிக்க நாடுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உடைத்த அரிசி முக்கியமாக நூடுல்ஸ் போன்ற உணவுகள் மற்றும் கால்நடை தீவன உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக உள்ள இந்தியா, 2021ல் 21.5 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது.
உடைத்த அரிசி பிரதானமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், 78 கொள்வனவாளர்கள் 384 கப்பல்களில் உடைத்த அரிசியை பெப்ரவரி 23ஆம் திகதி வரை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இறக்குமதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.