அரிசிகளின் விலை அறிவிப்பு : அதிக விலைக்கு விற்றால் அபராதமும் தண்டனையும்

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி யாழ்.மாவட்டத்தில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும், இதன்போது கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும், பொது மக்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தாதவாறு அத்தியவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபா
ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபா
ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபா
ஒரு கிலோ வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென அரசால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தனியொரு வர்த்தகர் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஐந்து லட்சம் ரூபா அபராதமோ, ஆறு மாத கால சிறைத்தண்டனையோ அல்லது இந்த இரண்டு தண்டனைகளோ விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனியார் நிறுவனமொன்றுக்கு ஐந்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது