அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் : காரணமானவர்களை கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டதை அடுத்து பல்வேறு அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நிறுத்தி விட்டு சென்றுள்ள நிலையில் காணப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்து, அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாவிட்டால், காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் இன்னமும் வரி செலுத்துவோரின் பணத்தில் இயங்கும் என தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.

இந்த வாகனங்களை நிறுத்த இது சரியான இடம் அல்ல, ஆனால் இந்த வாகனங்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்றார். கடந்த ஆண்டுகளில் பொதுச் சொத்துக்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 833 வாகனங்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டளவில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளன. எனவே முன்னாள் ஜனாதிபதிகள் பதவியை இராஜினாமா செய்யும் போது அந்த வாகனங்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என நாம் விசாரிக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு சொந்தமான 253 வாகனங்கள் உள்ளன. இலங்கை அறக்கட்டளை நிறுவனத்திலும் லக்சலாவிற்கு அருகாமையிலும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமற்ற பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விவரங்களை நாங்கள் ஏற்கனவே கோரியுள்ளோம், அவற்றைப் பயன்படுத்தியவர்கள் மற்றும் அதற்கு யார் பொறுப்பு என்பது உள்ளிட்ட தகவல்கள் உட்பட எனவும் அவர் தெரிவித்தார்.

கைவிடப்பட்ட வாகனங்கள் மக்களின் சொத்துக்கள் எனவும், அவற்றை துஷ்பிரயோகம் செய்வது ஜனாதிபதி செயலகத்திற்குள் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமைக்கு காரணமானவர்களை கண்டறியுமாறு ஜனாதிபதி விசாரணை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.