அரச திணைக்களங்கள் கையகப்படுத்திய காணிகளை மீள் பரிசீலனை செய்ய தீர்மானம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்கள் தங்களுக்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரித்தமை தொடர்பில் ஜனாதிபதியிடம் குறித்த வர்த்தகமானிகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டது,.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் ஆகியோர்களின் இணைத்தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டபோது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச திணைக்களங்களால் அரசகாணிகளாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். குறித்த விடயம் தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச காணிகள் அதிகம் உள்ள இடம் வடமராட்சி கிழக்கு, அந்த பகுதியில் அரச திணைக்களங்கள் தமக்கு தேவையான காணிகளை வர்த்தகமானியில் பிரசுரித்து அபகரித்தால் பொதுமக்கள் வாழ்வதற்கு காணி இல்லாத நிலை ஏற்படும் எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரசுரிக்கப்பட்ட காணி தொடர்பான விடயங்கள் அனைத்தையும் மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியை கோருவதாக கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் பொலிஸார்கள்,பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்