அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்!
பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இலங்கை நிர்வாக சேவை சங்கம் என்பது, அரச சேவையின் முதன்மையான நாடளாவிய சேவையான இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும். இம்முறை அதன் வருடாந்த மாநாடு 05 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.