
அரச சட்டவாதி ஸக்கி இஸ்மாயில் சட்ட முதுமானி பட்டம் பெற்றார்
-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்-
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கைகள் – 2022 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா 2024 ஜனவாரி மாதம் 10, 11 மற்றும் 12 ம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் அரச சட்டவாதி ஸக்கி இஸ்மாயில் தனது சட்டமுதுமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
ஸக்கி இஸ்மாயில் தனது சட்டமானி பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2010ம் வருடத்தில் பூர்த்தி செய்திருந்ததுடன் 2011 ம் வருடத்தில் இலங்கை உச்சநீதிமன்றின் சட்டத்தரணியாக உறுதிப்பிரமாணம் செய்திருந்தார்.
இவர் 2009/10 வருடத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்ட பிரிவினால் இருவருடங்கள் மேற்கொள்ளப்பட்ட “மோதல்கள் நிறைந்த சமூகங்களில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையில் பதட்டங்கள்/ விரோதங்களைக் குறைப்பதில் இத்தகைய செயல்முறையின் செயல்திறன் ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆராய்ச்சியில் உதவி ஆய்வாளராக பணியாற்றியிருந்தார். இவ்வாய்வானது நேபாளம், பிலிப்பைன் மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த அறிஞர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 2010 வருடத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலைத்தின் திட்டம் மற்றும் கற்கைகளுக்கான இணைப்பாளராக கடமையாற்றியதுடன் அங்கு காதிகளுக்கான பயிற்சி திட்டங்கள், மனித உரிமை மற்றும் சமாதான டிப்ளோமா கற்கை நெறிகள், மற்றும் மனித உரிமைகள் மற்றும் சனநாயகப்படுத்தல் முதுமானி கற்கை முதலியவற்றுக்கு பொறுப்பாக பணியாற்றினார்.
2011 ம் வருடத்தின் டானிஸ் அகதிகள் பேரவையில் (Danish Refugees’ Council-DRC) சட்ட பாதுகாப்பு அலுவலராக ( Legal Protection Officer) இணைந்துகொண்ட இவர் அந்நிறுவனத்தின் முழு வடமாகாணத்துக்குமான பொறுப்பாளராக யுத்தத்தின் பின்னரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போதும், மீளகுடியமர்த்தலின் போதும் பணியாற்றினார்.
இதன்போது சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக யுனிசப் நிறுவனத்தினால் டென்மார்க் நாட்டில் 7 நாட்கள் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டில் டானிஸ் அகதிகள் பேரவையின் (DRC) இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்டு இலங்கையில் யுத்தத்தின் பின்னராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நிலைமை தொடர்பாக ஆய்வு அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர் 2013 ம் வருடத்திலிருந்து இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணிபுரிந்து வருகின்ற இவர், இலங்கையின் பல்வேறு மேல்நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் வழக்குத்தொடுநராக கடமையாற்றிய அனுபவங்களை கொண்டவராவார்.
இதன்போது பல்வேறு பயிற்சிகளை நிறைவு செய்துள்ள இவர் விசேடமாக அமெரிக்க நீதி திணைக்களத்தினால் (US Department of Justice) வழங்கப்பட்ட ‘விசாரணை திறன் பயற்சி (Trial Advocacy Skills Training)’, ‘பாலியல் குற்ற வழக்குகளில் உளவியல் மற்றும் சட்ட உத்திகள் (The Effective Prosecution of Sexual Crimes: Psychology and Legal Strategies) பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், இவர் அரசியலமைப்பு சட்டம், இலங்கை முஸ்லிம் சட்டம், மனித உரிமைகள் சட்டம், ஷரீஆ சட்டம், சர்வதேச சட்டம் ஆகியவற்றில் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன் அவை கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதலியவற்றின் வெளியீடுகளில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது சட்டமுதுமானி பட்டத்திற்கான ஆய்வினை இஸ்லாமிய (ஷரீஆ) சட்டத்தில் உடல்ரீதியான தண்டனை, கல்லெறிதல் மற்றும் மரண தண்டனை முதலியன குறித்து இஸ்லாமிய குற்றவியல் நீதிமுறை (Islamic Criminal Justice System) எவ்வாறு அணுகுகின்றது என்பது குறித்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு தனது சட்டமுதுமானி கற்கைக்காக இவர் குற்றவியல் நீதி, தீங்கியல் சட்டம் மற்றும் சர்வதேச இராணுவ சட்டம் ஆகியவற்றை தேர்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
