அரசு புதிய ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு முன், முன்னைய ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

இலங்கை அரசாங்கம் புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு முன், இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முன்னைய 36 ஆணைக்குழுக்களையும் அங்கீகரிக்க வேண்டும் என மனித உரிமைகள் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சி.எச். ஆர்.டி எனப்படும் மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம், பொட், இனி காணாமலாவதில்லை, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, ஐரீஜேபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கடந்த கால ஆணைக்குழுக்கள் பற்றிய ஆய்வு விவரத்தை வெளியிட்டுள்ளன.

அந்த கூட்டு ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாரதூரமான மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைகளைத் தாண்டியுள்ளது.

அவ்வாறிருக்கையில் தற்போது பிறிதொரு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு எனப்படும் இப்புதிய ஆணைக்குழு, உண்மையைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குறைந்தது 36 ஆணைக்குழுக்களைக்கொண்ட வரிசையில் புதிதாக இணைந்துள்ளது.

எனினும், நீதியும் பொறுப்புக்கூறலும் மழுப்பலானதாகவே தொடர்ந்தும் இருந்துவருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். நடவடிக்கை எடுக்கக்கோரி, காணாமற்போனவர்களின் குடும்பங்கள் துணிகர வீதிப்போராட்டங்களை ஆரம்பித்து இப்பொழுது எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே 240இற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இப்புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிராகரித்து 37 குடியியல் சமூக அமைப்புக்களும் 19 செயற்பாட்டாளர்களும் ஏற்கனவே வெவ்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

கடந்தகாலப் பொறிமுறைகளின் மோசமான தோல்வியை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தத் தவறியமை, புதிய கட்டமைப்பிற்கான போதுமான அதிகாரமின்மை, சர்வதேச பிரதிநிதிகளை ஈடுபடுத்தாமை, பொருத்தமான நீதித்துறைப் பொறிமுறையின்மை, மற்றும் முந்தைய ஆணைக்குழுக்களின் நீண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்து, நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில் ஒரு, அதாவது 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.

பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் கிடைக்கின்றன.

உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்க முடிந்தது.

மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டன, மாறாக, குற்றத்திற்குக் காரணமானவர்களைப் பொறுப்புக் கூறவைப்பதற்காக அல்ல, இதனால், அதே நபர்களால் திரும்பத்திரும்ப பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது.

இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணையத்தளத்தில் வெளியிடும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் இதுவரை நிறுவப்பட்ட 36 ஆணைக்குழுக்களில் முதலாவது ஆணைக்குழுவாக நவம்பர் 1956 கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற குடியியல் கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான ஆணைக்குழுவும் கடைசி 36ஆவது ஆணைக்குழுவாக 6 யூன் 2022 நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2022 மார்ச் 31 இற்கும் மே 15 இற்கும் இடையில் இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை மற்றும் களவு ஆகியை அனைத்து வடிவ நாசவேலைகளுக்கும் ஆளாக்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட தனிநபர்களதும், நிறுவனங்களதும், அமைப்புக்களதும், கூட்டு நிறுவனங்களதும் சொத்துக்கள் மற்றும் ஆளிழப்புக்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான விசாரணை ஆணைக்குழுவும் பற்றிய விவரங்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.