அரசியலமைப்புச் சபையில் மாற்றம்?

 

அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படவுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள், வெளிப்படையான மற்றும் ஆலோசனைகளைப் பெற்ற ஒரு முறையான பொறிமுறையின் ஊடாக நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அரசியலமைப்புச் சபையில் தற்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளாக உள்ள கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி டில்குஷி அநுலா விஜேசுந்தர மற்றும் பேராசிரியர் தினேஷா சமரத்ன ஆகியோரின் பதவிக்காலம் 2026 ஜனவரியுடன் முடிவடைகிறது.

21வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மீண்டும் நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபை, உயர் பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த சபைக்கு நியமிக்கப்படுபவர்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, “முன்மாதிரியான நேர்மை” கொண்ட நபர்களாக இருக்க வேண்டும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நியமனச் செயற்பாட்டின் போது, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற தொழில்முறை அமைப்புகளுடன் ஆலோசனைகளை நடத்துவது அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு, இவ்வாறான நியமனங்களில் பங்குதாரர்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானது என சட்டத்தரணிகள் சங்கம் அந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளது.