அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கிழக்கு மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்
அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு, அடுத்த வாரத்தில் இருந்து கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிபடுத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்த தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களின் இடமாற்றம், உரிய நடைமுறைக்கு அப்பால் செயற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் கடந்த 2ஆம் திகதி நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.
எனினும், அந்தக் குழுவின் அறிக்கை இதுவரை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
மிகச் சிறிய பிரச்சினையைக் கூட சுகாதார அமைச்சினால் தீர்க்க முடியாமல் இருப்பது, மருத்துவர்களின் இடமாற்றத் திட்டத்தின் பின்னால் அரசியல் தலையீடு உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு முன்பும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து நிறைவேற்றுக் குழு கூடி அன்றைய தினமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கும் என்றும் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
தற்போது அம்பாறை மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
